மச்சி!! அவ உன்னதான்டா பார்க்குறா!!!
பக்கத்து கேபின்ல “டொக்கு டொக்குன்னு” சவுண்ட் வந்துச்சு.எப்பவும் நம்ம பிரவீன் code அடிக்கமாட்டானே?
எப்பவும் காபி பேஸ்ட் தானே? இன்னைக்கு என்ன புதுசா ஏதோ சத்தம்லாம் வருதுனு எட்டிப்பார்த்தேன்.
பயபுள்ள ஆன்ராய்ட் மொபைல இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டிகிட்டு இருந்துச்சு .
“ பிரவீனு என்னடா பண்ற?“
“matrimonial application டா !!,பொண்ணு தேடிட்டு இருக்கேன் “.
“என்னது பொண்ணு தேடிட்டு இருக்கியா ? அப்போ நீ வேலை செய்யலையா?”
“போடா டேய் இங்க பல பேரு இந்த app இன்ஸ்டால் பண்ணிட்டு இத அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டிகிட்டு பெர்பெக்ட் மேட்ச் தேடிகிட்டு இருக்கானுங்க”
“அப்போ ஒருத்தனும் இங்க வேலை செய்யல? வெளங்கும்,சரி மேட்ச் கிடைச்சுதா இல்லையா? “
“கிழிச்சது,ரெண்டு நாளா இத ஆட்டி ஆட்டி கை வலிச்சது தான் மிச்சம்”
“டேய் ,கொஞ்சம் இரு ,நீயும் ப்ரனதியும் ஒண்ணா சுத்திட்டு இருந்தீங்களே என்ன ஆச்சு டா?”
“இல்ல மச்சி அவ Friend ஆஹ தான் பழகுனா நான் தான் தப்பா நினைச்சு அப்ரோச் பண்ணிட்டேன்”
“என்னடா சொல்ற ? ஒண்ணா டின்னெர்லாம் போனீங்க? என்ன கலட்டி விட்டாளா?”
“மச்சி சொல்றேன் கேளு… “
பிளாஷ்பாக் :
“ப்ரணதி …..”
“சொல்லுடா பிரவீன்”
“உன்ன எனக்கு பிடிச்சு இருக்கு ,Shall We Marry?”
“நீயுமா இப்படி?”
“என்ன நானுமா இப்படி? ஏன் நீ என்ன லவ் பண்ணலையா?”
“இல்லை”
“என்கூட சிரிச்சு பேசல?”
“பேசுனேன்”
“என்ன டின்னெர் கூப்டல?”
“கூப்டேன்”
“என்ன சென்னைய சுத்திகாமிக்க சொல்லல?”
“சொன்னேன்”
“நான் லீவ் போட்ட அப்போ எனக்கு நீ “i miss u”னு மெசேஜ் அனுப்பல?”
“அனுப்புனேன்”
“அப்போ அதுக்கு பேரு லவ் இல்லாம என்ன?”
“சரிடா இப்போ நான் உன்ன கேட்குறேன் நீ பதில் சொல்லு”.
“கேளு…”
“உன் பெஸ்ட் friend தினேஷ் கூட நீ சிரிச்சு பேசல?”
“பேசுனேன்…”
“அவன் கூட டின்னெர் போகல?”
“போய் இருக்கேன்”
“அவனுக்கு நீ miss you சொன்னது இல்ல?”
“சொல்லி இருக்கேன்,ஆனா அவன் பையன் நீ பொண்ணு”
“friendshipல எங்க இந்த பையன் பொண்ணு வித்தியாசம் வந்துச்சு?”
“இங்க பாரு நான்லாம் பொண்ணுங்க வாடையே படாதவன் ,நாங்கலாம் ஒரு பொண்ணு சிரிச்சு பேசுனாலே ஆயிரம் பாட்டாம்பூச்சிங்க பறக்கவிட்டு வயலின் வாசிப்போம்,
நீ என்கிட்ட சிரிச்சு பேசும் போது எல்லாம் எனக்கு எல்லாம் புதுசா இருந்துச்சு,சின்ன வயசுல ஒரு பொண்ணு திரும்பி பார்த்தாலே லவ்னு அவ பின்னாடியே போவோம்.அவ பழனிக்கு போயிட்டு வந்து முருகன் டாலர் குடுத்தா
அதை காதல் சின்னமா நினைச்சு பாதுகாப்போம்,”மச்சி அவ உன்ன பார்குறாடா” னு ஒருத்தன் சொன்னா போதும் அந்த நிமிஷம் அது எவ்ளோ மொக்கையான பொண்ணா இருந்தாலும் ஐஸ்வரியாராய் ரேஞ்சுல நினைச்சு பீல் பண்ணுவோம்”
“கொஞ்சம் நிறுத்துறியா?”
“இந்த பொண்ணுங்களே இப்படி தாண்டி..”
“நான் உன்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னேனா? “
“இல்லை”
“அப்புறம்??? நீயா ஒன்னு நினைச்சுக்குறது அப்புறம் இந்த பொண்ணுங்களே இப்படி தான்னு திட்டி பாட்டு பாடுறது….ஏன்டா ஸ்கூல்ல அந்த பொண்ணு உன்ன திரும்பி பார்த்துச்சுன்னா நீ கணக்குல முட்ட மார்க் எடுத்தா திரும்பி பார்த்து சிரிக்க தான் செய்வாங்க,அப்புறம் பழனிக்கு போனா முருகன் டாலர் குடுக்காம திருப்பதி
லட்டா குடுப்பாங்க? ,என்ன கேட்காம உன்ன யாரு வயலின் எல்லாம் வாசிக்க சொன்னா?”
“இங்க பாரு நான் உன்கூட வந்தேன் மத்த பசங்க கூட போகல ,அப்படீனா உன்ன லவ் பண்றேன்னு அர்த்தம் இல்ல,மத்த பசங்கள விட உன்கூட நான் பாதுகாப்பா பீல் பண்றேன்,i feel safe with you.
உன்ன நான் அண்ணானு கூப்பிட்டு இருக்கலாம் அப்படி கூப்பிட்டு இருந்தா இந்நேரம் நீ இப்படி propose பண்ணி இருக்க மாட்ட.ஆனா எனக்கு அண்ணன் வேண்டாம் friend தான் வேணும்.
ஒரு பொண்ணு உன்ன நம்பி ,உன்கூட டின்னெர்க்கு வர்றானா அவ ஒன்னும் உடனே வர மாட்டா உன்ன அவ பல நாளா கவனிச்சு இருப்பா உன் கூட என்னைக்காவது அவ பாதுகாப்பா உணர்ந்து இருப்பா அதுனால உன்கூட தைரியமா வருவா”
“என்ன இப்படி சொல்ற? கொஞ்சம் யோசிச்சு சொல்லு ,எனக்காக மாறலாம்ல?”
“மாற வேண்டியது நான் இல்லடா நீதான்,பொண்ணுங்க எப்பவோ மாறிட்டோம் ,உன்ன மாதிரி லவ்க்கும் friendshipகும் வித்தியாசம் தெரியமா இருக்குற பசங்க தான் மாறனும்,திரும்பி என் friend பிரவீன் எனக்கு வேணும்”
“கொஞ்சம் டைம் குடு”
“டேக் யுவர் ஓன் டைம்”
இதுதாண்டா நடந்துச்சு.
“டேய் பிரவீன் என்னடா உன்ன இப்படி ஏமாத்திட்டா?”
“ஏமாத்துனது அவ இல்ல மச்சி நான்தான்,ஒவ்வொரு நிமிஷமும் என்ன நம்பி வந்தவள நான் தான் தப்பா அப்ரோச் பண்ணிட்டேன்”
“என்னடா நீயும் இப்படி சொல்ற?”
“ஆமா மச்சி பொண்ணுங்க தெளிவா இருக்காங்க,மாற வேண்டியது நம்மள மாதிரி பசங்க தான்”
“சரி என்னமோ சொல்ற,சரி வா சாப்ட போலாம்”
“இல்லடா டின்னெர் போறேன்..”
“யார்கூடடா ?”
“ப்ரணி கூட தான்.”
“உன்னால முடியுமா?”
“முடியனும் மச்சி, நான் மாறனும் மச்சி, she is a good friend ,i want her,she needs me”
மாற வேண்டியது நாம தான்…….