வளர்த்தவள் – நானும் இவள் குழந்தை என்பதில் எனக்கு பெருமை.
எத்தன பேருக்கு இங்க உண்மையான பாட்டியோட பாசம் கிடைச்சு இருக்கு?
எத்தன பேருக்கு அவங்க ஊட்டி விடுற பாக்கியம் கிடைச்சு இருக்கு?
எத்தன பேரு பாட்டி கையால எண்ணெய் தேய்ச்சு குளிச்சு இருக்கீங்க?
பாட்டி என்பவள் இரு தலைமுறை பார்த்தவள்,அவள் அம்மம்மா.அவளின் பாசமும் அம்மாவுக்கும் மேல்.
நான் மிடில்கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன்.அப்பா ,அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.அம்மாவின் அம்மாவும் ,அப்பாவின் அம்மாவும் வந்து தங்கி என்னை குழந்தை பருவத்தில் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு முடியவில்லை.
அப்பொழுது தான் ,என் அண்ணன் ராஜேஷ் குழந்தையாய் இருக்கும் போது பார்த்தக்கொண்ட பாட்டி,என் ஆயா என்னை பார்த்துக்கொள்ள சம்மதித்தாள்.அவள் எங்கேயோ இருந்து வந்தவள்.
அவள் பெயர் சரசு.
அம்மாவும் அப்பாவும் வேலைக்கு செல்ல,என்ன தாலாட்டி சீராட்டி வளர்த்த மற்றுமொரு அன்னை அவள்.
அம்மா சொல்வாள்,”மற்ற பாட்டிக்கள் எல்லாம் அவர்கள் வேலை செய்யும் போது குழந்தையை கட்டி போட்டு விடுவார்கள் ,ஆனால் இவள் அப்படி செய்ய மாட்டாள் அதனால் சரசு பாட்டியை உன்னை பார்த்துக்க வைத்தோம் என்று.”
அவள் என்னை,எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிய நாட்கள் தான் ,இன்று என் முகத்தில் பருவாகி அவளை தினமும் நியாபகம் கொள்ள வைக்கிறது.
அவள் ஊட்டிய நெய்’ சோறும்,தயிர் சாதமும் தான் என்னை இந்த சென்னை வெயிலில் தாக்கு பிடிக்க வைக்கிறது.
அவள் செய்து ஊட்டி விட்ட மிளகு ரசம் தான் என்னை சிறு வயதில் நோய்கள் அண்டாமல் செய்தது.
இத்தனைக்கு ,அவள் விதவை.குழந்தை இல்லை.ஊரில் உள்ள குழந்தையை எல்லாம் பார்துக்கொண்டவளுக்கு ஆண்டவன் அவளுக்கு ஒரு குழந்தையை தரவில்லை.”அவள் பெற்றிருந்தாள் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாள்,பெறாததனால் இன்று என் போன்ற பல குழந்தைகளுக்கு அன்னை அவள்.”
அவள் வீடு கொஞ்சம் தூரம்,நாங்கள் வளர்ந்து பின்னர் வேறு பிள்ளைகளை பார்த்துக்கொள்ள சென்று விட்டாள்.ஆனால் ஒவ்வொரு தீபாவளிக்கும் அவளுக்கு என்று கம்பி மத்தாப்பு,புஸ்வானம் வாங்கி செல்வேன்.பொங்கலுக்கு புடவை.கரும்பு ,எனக்கு சாப்பிட கற்றுக்கொடுதவேளே அவள் தான்.
அவளை எப்பொழுதும் பெயர் சொல்லி தான் அழைப்பேன்.நான் வளர்ந்த பின்னர் என் தம்பியையும் அவள் தான் பார்த்துக்கொண்டாள்.
எனக்கு தமிழ் கற்றுத்தந்தவளும் அவள் தான்,பல்லாங்குழி விளையாட பழக்கி தந்தவளும் அவள் தான்.சிறு வயதில் விரல் சூப்பும் பழக்கும் உண்டு எனக்கு,அவள் நான் ஒவ்வொரு முறை சூப்பும் பொழுதும் என்னை அடித்ததில்லை,விரல் எடுத்துவிடுவாள்,மறுபடியும் சூப்புவேன் மறுபடியும் எடுத்துவிடுவாள்,அவ்வளவு பொறுமை,இத்தனைக்கும் நான் அவள் பெற்ற பிள்ளை அல்ல.
ஒரு முறை அவளிடம் கேட்டேன்,“ஆயா,ஏன் என்ன நீ கட்டி போடல? நான் உன்ன வேலை செய்யும் போது தொந்தரவு செய்ய வில்லையா?”
அதற்கு அவள் சொன்னாள் “டேய் பேராண்டி,அது தொந்தரவு இல்லடா,உன்ன கட்டி போட்டா வயிறு இறுகும்,அப்புறம் நீ கம்மியா தான் சாப்பிடுவ,அதுவும் இல்லாம பசங்கன்னா தொந்தரவு பண்ணனும் ,உன்ன கட்டி போட்டு உன்ன நான் அந்த வயசுலேயே அடங்கி போக வைக்க விரும்பல,நீ யாருக்கும் அடங்க கூடாது,பயப்பட கூடாது அதான் நான் கட்டி போடல”.
அன்று அவள் என்னை அடங்கி போக வைத்து இருந்தால்,இன்று என் முடிவுகளை நானே யோசிக்கும் தைரியம் எனக்கு வந்து இருக்காது.
காலங்கள் ஓடின,அவளுக்கும் வயது ஆனது.கல்லூரி நாட்களில் நான் ஊருக்கு செல்லும் போது எல்லாம் என்னை பார்க்க வருவாள்.அவள் மாதுளம் பழம் உளிர்த்து என் அருகே கொண்டு வந்து வைத்து,”நீ சோம்பேறி,உளிக்க சோம்பேறி தனம் பட்டு மாதுளம் பழம் சாப்பிட மாட்ட,முதல்ல சாப்புடு”.இது தான் அவள்.
கல்லூரி முடித்தேன்,வேலையையும் கிடைத்தது,அனால் வேலைக்கு சேர இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில் ஊரில் இருந்தேன்.அப்பொழுது அவளுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு நானும் என் தம்பியும் சென்றோம் அவளை காண,
என்னை பார்த்தவுடன் ,விஜி,எப்படிடா இருக்க? பார்த்து எம்புட்டு நாளாச்சு? வேலை கிடைச்சுடுச்சுன்னு அம்மா சொல்லுச்சு,சந்தோசம்டா கண்ணு,உன் முதல் சம்பளத்துல எனக்கு அரக்கு கலர் பட்டு புடவை வேணும்.
சரி ஆயா,ஆமா வீட்ல இருந்த தட்டுமுட்டு சாமான் எல்லாம் எங்க?
நான் என் தம்பிக்கு என் சொத்தை எல்லாம் எழுதி வச்சேன்,எனகென்ன புள்ளயா குட்டியா? அவன் என்ன பார்த்துக்குறேன்னு சொன்னான்,ஆனா என் சொத்த எல்லாம் புடிங்கிட்டு அநாதையா விட்டான்,வீட்டுல இருந்த காஸ் அடுப்ப கூட தூக்கிட்டு போய்ட்டான்,டீ வச்சு குடிக்க கூட முடியல…சொல்லும் பொழுது அவள் கண்ணில் நீர்.
என் கண்களிலும் தான்,என்னை பார்க்க வரும் போது மாதுளம் உளிர்த்து தரும் அவளுக்கு நான் எதுவும் வாங்கி செல்லவில்லை.மனது உறுத்த ,உனக்கு என்ன வேணும் ஆயா என்று கேட்டேன்.
“கொசு ரொம்ப கடிக்குது ஆல் அவுட் வேண்டும்”
“ஆயா..சாப்பிட என்ன வேணும்…”
“எதுவும் வேணாம்டா,என் புருஷன் பென்ஷன் காசுல பக்கத்துக்கு வீட்டுக்கு கொஞ்சம் குடுத்து அவங்க சமைச்சு போடுறாங்க,அதுவே போதும்.
“ஆயா..சொல்லு என்ன வேணும்”
“ரவுண்டு பன்னு வேணும்”
“ஹா ஹா இன்னும் நீ அதை விடலையா?”
அவள் கேட்டதை வாங்கி ,பழங்களும் வாங்கினேன்,மாதுளமும் கூடத்தான்,அவள் கையால் உரிக்க சொல்லி சாப்பிட்டேன்,அது வேறு சுவை.அதை செய்ய அவளுக்கும் பிடிக்கும்.
கிளம்பும் போது,”ஆயா,காசு இருக்கா?’
“எல்லாம் இருக்குடா நீ பத்திரமா வீட்டுக்கு போ”.
அப்பொழுது தான் அம்மா சொன்னதாக தம்பி சொன்னான்,” பாட்டியின் தம்பி,அவள் பல வருடம் எங்களை வளர்த்து சேமித்து வைத்து இருந்த முப்பதாயிரம் ரூபாயையும் அவள் தம்பி பிடுங்கி விட்டா என்று”
“மனுஷனா அவன்,சே!!”
“டேய் அவன திட்டாதடா,என்ன இருந்தாலும் நான் வளர்த்த புள்ளடா அவன்”
இது தான் அவள்.
கையில் இருந்த நூற்றிஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு கிளம்பினேன்.
அப்பொழுது என் தம்பியை பார்த்து அவள் கூறினாள்,
“மொளுக்கா(அவள் இப்படி தான் அவனை கூப்பிடுவாள்),உன் ஸ்கூல் பஸ் இந்த பக்கமா தான போகுது,நான் உனக்கு டாட்டா காட்டலாம்னு தேடுவேன் பஸ் சல்லுனு போய்டும்,இனிமே பஸ் போகும் போது எனக்கு மறக்காம டாட்டா காட்டு,பொட்ட புள்ளைங்களுக்கு தான் டாட்டா காட்டுவ போல”.
இது தான் அவள்.அவ்வளவு கஷ்டங்களிலும் அவளின் கேலியும் கிண்டலும்,குழந்தை தனமும் அவளை விட்டு போக வில்லை.
வேலைக்கு சேர்ந்தேன்,முதல் மாதம் சம்பளம் வருவதர்ற்குள் அவள் இறந்து போனாள்.அவள் கேட்ட அரக்கு கலர் பட்டு புடவை இன்னும் நான் வாங்கவே இல்லை.
அவள் தம்பியை நேரில் பார்த்து,இவை அனைத்தையும் படிக்க சொல்லி அவன் கண் முன்னாடியே அவள் சமாதியில் வைக்க வேண்டும் அந்த புடவையை, Software Engineer ஆக இல்லை,அவள் சொல்லி சொல்லி வளர்த்த “கலெக்டர் ஆகிடு விஜி,அவரு தான் பென்ஷன் வாங்கி தந்தாரு எனக்கு”.ஆவேன் ஒருநாள்!!!.
இன்னைக்கு அவள் வளர்த்த பிள்ளைகள் நாங்கள் நன்றாக இருக்க,அவள் கஷ்டப்பட்டு இறந்தது தான் விதியோ?.
இந்த குறும்படத்தை பார்த்து தான் எனக்கு அவள் நியாபகம் பீறிட்டது,பாட்டியின் பாசம் உணர்ந்த அனைவவரும் பாருங்கள்.அனைத்திலும் மாசாலா காமெடி எதிர்பார்க்கும் காரணத்தால்,இதில் காமெடியும் அச்சத்தல்.அனைவரும் உங்களை குளிப்பாட்டி விட்ட பாட்டியை ஒரு நிமிடம் ஆவது நினைப்பீர்கள்.